தமிழ்நாடு அரசு - நிதித்துறை
கருவூல கணக்கு ஆணையரகம்
ஓய்வூதியர்கள் தரவுதளம்

எங்களைப் பற்றி

தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத்துறையானது மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னையின் மூலமாக கீழ்காணும் வகையிலான ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தினை வழங்கி வருகின்றது.

1. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்.

2. இந்திய ஆட்சிப்பணி குடிமைபணி ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள்.

3. தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும் பிறமாநில ஓய்வூதியர்கள்.

4. மாநில சுதந்திர போராட்ட ஓய்வூதியர்கள், கலை மற்றும் பண்பாட்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், உலிமா ஓய்வூதியர்கள், எல்லை காவலர் ஓய்வூதியர்கள், மொழிக்காவலர் ஓய்வூதியர்கள், பத்திரிக்கை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் போன்ற சிறப்பு ஓய்வூதியர்கள்.

மேற்காணும் முறையில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கீழ்காணும் இரண்டு வகைகளில் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தினை பெறுகின்றனர், அவையாவன;

1. கருவூல முன்னோடி திட்டம் (ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான பதிவேடுகள் கருவூலங்கள்/ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னையில் பராமரிக்கப்படும்)

2. பொதுத்துறை வங்கி திட்டம். (ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான பதிவேடுகள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளின் பராமரிக்கப்படும்)

ஓய்வூதியர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் கருவூலங்களிலும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசானது ஓய்வூதியர்கள் அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் பொருட்டு பொதுத்துறை வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெற்ற ஓய்வூதியர்களை முன்னோடி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முறைக்கு அரசாணை எண்.268 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:18.09.2017 –ன் மூலம் மாற்றம் செய்து ஆணை வழங்கி உள்ளது.

31.03.2018 அன்றுள்ளவாறு முன்னோடி திட்டத்தின் மூலம் சுமார் 6.73 லட்சம் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

கருவூல கணக்குத்துறையினால் முன்னோடி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் விவரதொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையம், சென்னையின் மூலமாக “மின் – ஓய்வூதியம்” என்ற பெயரில் கணிணி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய விவரதொகுப்பில் உள்ள விவரங்களை ஓய்வூதியர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான தெளிவுரைகள்/விவரங்கள், ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்களின் நேர்காணல் விவரம், கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதியர்களின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான விவரங்கள், அகவிலைப்படி விவரங்கள், படிவங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அரசாணைகள் போன்றவைகளுக்காக அடிக்கடி ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை / கருவூலங்களை நாடுகின்றனர்.

ஓய்வூதியர் பற்றிய விவரங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளவும் சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கும் பொருட்டு “ஓய்வூதியர் தரவுதளம்” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ”ஓய்வூதியர் தரவுதளமானது” ஓய்வூதியர்கள் தாங்களாகவே தரவுதளத்தினை கையாண்டு தங்களுக்கு தேவையான விவரங்களை பெற்று அவர்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை திருப்திபடுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.